ஐஸ்வர்யா சிபாரிசால் கபாலி படத்தை இயக்க வாய்ப்பு வந்தது: ரஞ்சித்

ஐஸ்வர்யா சிபாரிசால் கபாலி படத்தை இயக்க வாய்ப்பு வந்தது: ரஞ்சித்

ரஜினியின் கபாலி பட வாய்ப்பு வந்தது எப்படி என்பது குறித்து இயக்குனர் ரஞ்சித் மனம் திறக்கிறார்…

‘மெட்ராஸ்’ படம் பார்த்துவிட்டு ரஜினி சார் எனக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா, நான் ரஜினிக்காக வைத்திருக்கும் கதை பற்றி போனில் தொடர்பு கொண்டு கேட்டார். அவரிடம் இரண்டு கதை கருக்களை தெரிவித்தேன். அதில் ஒன்று தான் கபாலியாக உருவாகி இருக்கிறது.

இதுபற்றி ரஜினி சாரிடம் ஐஸ்வர்யா சொல்லி நான் அவரை சந்திக்க சம்மதம் வாங்கினார். ரஜினி தனது உண்மையான வயதை காண்பிக்கும் பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். கபாலி அது போன்ற கதை. அவர் வெள்ளை தாடி ‘கெட்–அப்’ல் வருவது தான் இந்த படத்தில் அவர் நடிக்க முக்கிய காரணம். அவரது விருப்பத்தை இப்படம் நிறைவேற்றி விட்டது.

ரஜினி சாரை முதலில் பார்த்த போது உற்சாக உணர்வையும் தாண்டி பயம் என்னை சூழ்ந்து கொண்டது. அவரை வைத்து எப்படி இயக்கப் போகிறோமோ என்று நினைத்தேன். நான் சூட்டிங்குக்கு வருமுன்பு, எனது கதையை படமாக்க நிறைய முன்ஏற்பாடுகளை செய்கிறேன். அதுபோல் ரஜினிக்கு ரசிகர்களிடம் உள்ள மரியாதையையும் வைத்து தான் கபாலி படம் தயாராகிறது. ஏற்கனவே நான் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு இந்த படத்துக்காக கடினமாக உழைக்கிறேன்.

மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சமூக கருத்து இருந்தது போல கபாலியிலும் இருக்கும். சினிமா ஒரு சக்திவாய்ந்த ஊடகம். எனவே, மக்கள் ஒரு சினிமாவை பார்த்துவிட்டு சாதாரணமாக விட்டு விடாமல், ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது கருத்து. அதுபோல் கபாலியிலும் ஒரு ‘மெசேஜ்’ இருக்கும்.

வடசென்னையில் ரவுடி என்று அழைக்கப்படுகிறவர்கள் உண்மையிலேயே கெட்டவர்கள் அல்ல. மக்களுக்கு நன்மை செய்பவர்கள் அதிகம். அவர்கள் செயல்பாடு முரட்டுத்தனமாக வெளியே தெரியும். ரஜினியின் கபாலி கேரக்டரும் அப்படித்தான் இருக்கும். நான் டைரக்டர் மகேந்திரனின் மிகப்பெரிய விசிறி. அவர் இயக்கிய முள்ளும் மலரும் படத்தில் ரஜினியிடம் ஒரு முரட்டுத்தனம் இருக்கும். ஒரு கையை இழந்த நிலையிலும், காளி கடும் கோபக்காரராகவே இருப்பார். அந்த படத்தில் அனலாக வரும் கேரக்டர் போலத்தான் கபாலியிலும் ரஜினி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முள்ளும் மலரும் திரைப்படத்தில், ரெண்டு கை ரெண்டு கால்போனா கூட இந்த காளி பொழச்சுக்குவான் சார், கெட்ட பையன் சார் அவன்’ என்று ரஜினி பஞ்ச் வசனம் பேசுவார். கபாலியும் அதுபோன்ற கேரக்டர் தான்.

கபாலியில் ரஜினிக்கு ‘பஞ்ச்’ வசனம் தனியாக எதுவும் கிடையாது. கபாலி என்ற பெயரே ‘பஞ்ச்’ வசனம் தான். ரஜினி இந்த படத்தில் ‘பஞ்ச்’ வசனம் பேசுவதற்கான தேவை எதுவும் உருவாக்கப்படவில்லை’.