லொள்ளு சபா இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம்

லொள்ளு சபா இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம்
விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியாக ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் அனைவராலும் கவனிக்கப் பெற்றவர் சந்தானம். சினிமாவில் இவரை சிம்பு அறிமுகப்படுத்த, அடுத்தடுத்து நிறைய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்தார்.

தற்போது, காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து ஹீரோவாக நடிக்க முன்வந்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்பிடித்தான்’ ஆகிய படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து, ஹீரோவாகவே வலம் வர முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாத இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும், சந்தானத்துக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. தமன் இசையமைக்கவுள்ள இப்படம் திகில் கலந்த காமெடி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.