அஞ்சனாவுடன் காதல் மலர்ந்தது எப்படி?: கயல் சந்திரன் பேட்டி

அஞ்சனாவுடன் காதல் மலர்ந்தது எப்படி?: கயல் சந்திரன் பேட்டி

கயல் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் சந்திரன். இவர் நடித்துள்ள பைசல், கிரகணம் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தற்போது சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் ‘கிழக்கிந்திய கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அஞ்சனாவுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 29–ந் தேதி சென்னையில் நடக்கிறது. மார்ச் 10–ந் தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். அஞ்சனாவுடன் காதல் ஏற்பட்டது எப்படி என்பது பற்றி நடிகர் சந்திரன் கூறியதாவது:–

அஞ்சனா நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய தனியார் தொலைக்காட்சியில் நான் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றினேன். அப்போது அஞ்சனாவுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகினோம். அவர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது.

எனது தாயாரிடம் நான் அஞ்சனா போல அழகுள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினேன். அதற்கு என் தாயார், ‘‘நீ அஞ்சனாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே’’ என்றார்.

அதன்பிறகு அஞ்சனாவிடம் என் காதலை தெரிவித்தேன். அதற்காக ‘ஐ லவ் யூ’ என்றெல்லாம் சொல்லவில்லை. ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா’ என்றேன். அவர் மிகுந்த சந்தோசத்துடன் சரி என்றார். அவர் திருமணத்துக்கு சம்மதிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அவர் ‘சரி’ என்று சொன்ன வார்த்தை என்னை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்கிறோம். எங்களுக்கு நடக்க இருப்பது காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.