கத்தியை வீழ்த்திய வேதாளம்

கத்தியை வீழ்த்திய வேதாளம்

அஜித் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்துள்ளது.

இப்படம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் அனைத்தும் படத்திற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. எனவே, ‘வேதாளம்’ படத்தை பார்க்க தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களின் கூட்டமும் அலைமோதுகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.23 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் நிலவரம் உலகம் முழுவதிலும் இருந்து கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, விஜய் நடித்து வெளிவந்த ‘கத்தி’ படம்தான் முதல் நாள் வசூலில் முதல் இடத்தை பிடித்திருந்தது. தற்போது, அந்த சாதனையை அஜித்தின் ‘வேதாளம்’ தகர்த்தெறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், மற்ற நாட்களிலும் ‘வேதாளம்’ படத்திற்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. இதனால், ‘வேதாளம்’ மேலும் பல சாதனைகளை முறியடிக்கும் எனவும் நம்பப்படுகிறது