பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி

பின்னணி பாடகர் சங்கர் மகாதேவனுக்கு திடீர் நெஞ்சுவலி: ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழில் சங்கமம் படத்தில் ‘வராக நதிக்கரையோரம்’, முதல்வனே படத்தில் ‘முதல்வனே முதல்வனே’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியவர் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன்.

வடஇந்தியாவில் பிறந்து வளர்ந்த சங்கர் மகாதேவனை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். இவருடைய இசையில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் சங்கர் மகாதேவன்.

பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், எசன்-லாய் ஆகியோருடன் இணைந்து நிறைய படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் தமிழில் வெளிவந்த ‘ஆளவந்தான்’, ‘விஸ்வரூபம்’ ஆகிய படங்கள் இவருக்கு பெரிய வெற்றியைத் தேடித்தந்தன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கர் மகாதேவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஈசிஜி எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு பிறகு அவர் பூரண நலம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சங்கர் மகாதேவன் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதில், எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து என்னுடைய நெருங்கிய நண்பர்களும், நலம் விரும்பிகளும் நான் பூரண நலம்பெற வேண்டி செய்த பிரார்த்தனைகளை பற்றி நன்கு அறிவேன்.

கடவுளின் ஆசீர்வதத்தாலும், உங்களின் நல்ல எண்ணங்களாலும், நல்ல மருத்துவர்களாலும், நான் தற்போது பூரண குணமடைந்துள்ளேன். நான் மீண்டும் அதிரடியாக வருவேன். எனக்காக காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.