16 கோடி ரூபாய் கொடுத்தாரா கமல்? அறக்கட்டளை மறுப்பு

16 கோடி ரூபாய் கொடுத்தாரா கமல்? அறக்கட்டளை மறுப்பு

கமல் தற்போது தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இது சமீபத்தில் வெளியானது. இதில் கிடைத்த தொகையான 10 கோடி ரூபாயையும், கமலின் சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி வேகமாக பரவியது. ‘பெற்றால்தான் பிள்ளையா’ என்ற அறக்கட்டளையின் அமைப்பாளர்களில் கமலும் ஒருவர். அவரது அறக்கட்டளைக்கே அவர் பணம் கொடுத்து வருமான வரி விலக்கு பெற்றாரா? என்று கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், இந்த செய்தி குறித்து ‘பெற்றால்தான் பிள்ளையா’ அறக்கட்டளையின் மேனேஜர் வினிதா சித்தார்த் அளித்துள்ள பேட்டியில், “எங்களுக்கு கமல் பணம் கொடுத்ததாக வந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர்பேடை யாரோ பயன்படுத்தி இப்படி ஒரு பொய்யான செய்தியை பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக எங்களுக்கு இரண்டு பிரச்சனைகள் வருகிறது.

எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி அமைதியாகிவிடுவார்கள். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம். இதனால் எங்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது” என்றார்.