3 வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி

3 வருடங்களுக்கு பிறகே திருமணம்: அனுஷ்கா அதிரடி

அனுஷ்காவின் பெரும் எதிர்பார்ப்பு படமான ‘ருத்ரமாதேவி’ தமிழில் வருகிற 16–ந்தேதி திரைக்கு வருகிறது. அதுபற்றி அவரிடம் கேட்டபோது…

‘ருத்ரமாதேவி’ 13–ம் நூற்றாண்டிலேயே பெண் விடுதலைக்காக பாடுபட்டவர். இதுகுறித்து டைரக்டர் குணசேகரன் தந்த புத்தகங்களை படித்து தெரிந்து கொண்டேன். அதை மனதில் வைத்து நடித்தேன்.

பொதுவாக எனக்கு அதிக நகைகள் அணிய பிடிக்காது. காதில் சிறிய கம்மல், கழுத்தில் மெல்லிய சங்கிலி அணிவேன். ஆனால் ‘ருத்ரமாதேவி’ படத்துக்காக ரூ.5 கோடி மதிப்பில் 15 கிலோ தங்க நகைகள் செய்து இருந்தனர். இதில் சுமார் 3 கிலோ நகைகளை மாற்றி மாற்றி அணிந்து நடித்தேன்.

ஒரிஜினல் தங்க நகைகளை அணிந்து நடித்தது அழகாக இருந்தது. என்றாலும், சண்டைக்காட்சிகளில் நகை அணிந்து நடித்தபோது சிரமமாக இருந்தது.

‘ருத்ரமாதேவி’ படத்துக்காக வாள் சண்டையை முறைப்படி கற்றுக்கொண்டேன். லட்சுமி என்ற யானையுடன் பழகி அதை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டேன். குதிரை சவாரி சிரமமாக இருந்தது. பலமுறை கீழே தள்ளிவிட்டது. சிரமப்பட்டு நடித்தேன்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்கு இந்த அளவு சிரமப்படவில்லை. நான் யோகா மாஸ்டர். எனவே உடல் எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் பெரிய விஷயமல்ல. நான் யாருடன் சேர்ந்து நடித்தாலும் அவரை காதலிப்பதாக செய்தி வந்து விடுகிறது.

அடுத்து அவரை திருமணம் செய்யப் போகிறீர்களா? என்று கேட்கிறார்கள். நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன். என் கையில் இருக்கும் படங்களையும், அடுத்து நடிப்பதற்காக பேசிக் கொண்டிருக்கும் படங்களையும் முடிக்க 3 வருடங்களுக்கு மேல் ஆகும்.

அதன்பிறகு திருமணம் பற்றி யோசிப்பேன். என்னை தென்னக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதாக சொல்கிறார்கள். நான் அந்த பெயருக்கு ஆசைப்படவில்லை. அதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். என்னை அனுஷ்கா என்று அழைப்பதையே விரும்புகிறேன். முன்பு நான் சரித்திர புத்தகங்களை விரும்பி படிப்பது இல்லை. இப்போது நிறைய படிக்கிறேன். எந்த பாத்திரங்கள் வந்தாலும் என்னால் எதை நடிக்க முடியுமோ அதை ஏற்பேன்.