4 நாட்களில் ரூ.3,280 கோடி வசூல்: உலக சினிமா வரலாற்றில் ஜுராசிக் வேர்ல்ட் புதிய சாதனை

ஹாலிவுட் தயாரிப்பாக வெளியாகி உலகெங்கும் வசூலை வாரி குவித்துவரும் ‘ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்படம் ரிலீசான நான்கே நாட்களில் 511 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 3,280 கோடி ரூபாய்) சம்பாதித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

டைனோசர்களை வளர்க்கும் ‘தீம் பார்க்’ கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் இதற்கு முந்தைய வசூல் சாதனை படைத்த ‘ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹால்லோஸ் பாகம்-2’ படத்தின் சாதனையை தகர்த்தெறிந்துள்ளது.

அமெரிக்க ரசிகர்களை பொருத்தவரை சுமார் 48 சதவீதம் பேர் ‘ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்படத்தின் ‘த்ரி-டி’ பதிப்பை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்துள்ளதாக ஹாலிவுட் சினிமா பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.

மொத்த வசூல் சாதனையில் தற்போதுவரை முதல் இடத்தில் இருக்கும் ‘அவதார்’ படத்தின் அசுர சாதனையை இந்தப் படம் முறியடிக்குமா? என்ற கேள்விக்கு பதில் இன்னும் சில நாட்களில் கிடைத்துவிடும் என ஹாலிவுட் சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.