5 ஆண்டுகளாக பழைய ஜீன்ஸ் பேண்ட்டையே அணியும் சல்மான் கான்

5 ஆண்டுகளாக பழைய ஜீன்ஸ் பேண்ட்டையே அணியும் சல்மான் கான்

15 ஆண்டுகளுக்கு முன்னர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டையும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஷூக்களையும் பயன்படுத்திவரும் நான் நட்சத்திர அந்தஸ்து என்ற தாக்கத்தில் இருந்து விலகியே இருக்க விரும்புகிறேன் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு பேட்டியளித்த சல்மான் கான் கூறியதாவது:-

பிரபல சினிமா நடிகர் என்ற நட்சத்திர அந்தஸ்தை நான் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. பிரபல நட்சத்திரம் என்ற அந்தஸ்தை விரும்புவதும் இல்லை. அந்த எண்ணத்தில் யாரிடமும் பழகுவதும் இல்லை. சல்மான் கான் பிரபல நட்சத்திரம் என்ற கருத்து மக்களாகவே உருவாக்கிக் கொண்ட என்னைப்பற்றிய ஒரு அபிப்ராயம், அவ்வளவுதான்.

எனக்கு இந்த இமேஜ் உருவாவதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் உதவி செய்துள்ளனர். தற்போது, நான் நடிக்கும் படங்களின் கதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எனக்கு கிடைத்துள்ளது. ஆரம்பகாலத்தில் என்னை ஆளாக்கிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் விரும்பிய கதைகளில் மட்டுமே நடித்து வந்தேன்.

550 ரூபாய்க்கு வாங்கிய சாதாரண டிஷர்ட்டை தான் தற்போது (இந்த பேட்டியின்போது) அணிந்துள்ளேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டையும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய ஷூக்களையும் இன்னும் பயன்படுத்தி வருகிறேன். ஆனால், திரைப்படங்களில் நான் ஏற்கும் கதாபாத்திரத்தின் பிரமாண்டத்தை கண்டு மக்கள் என்மீது பெரிய நட்சத்திரம் என்ற இமேஜை சுமத்துகின்றனர்.

பொதுவாகவே, விமர்சனங்களை நான் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால், அந்த விமர்சனங்கள் எனக்கு நெருக்கமானவர்களிடம் இருந்தோ, என்னைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் இருந்தோ, அல்லது, எனக்குள்ளே இருந்தோ வரும்போது சற்று சிந்திப்பதுண்டு. மற்றவகையில், என்னை விமர்சிப்பவர்கள், தங்களது கருத்து தவறு என்பதை காலப்போக்கில் உணர்ந்துக் கொள்வார்கள் என நினைத்துக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.