சல்மான் கான் தங்கை பிறந்தநாளில் கூச்சல், கும்மாளம்: போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.12,500 அபராதம் விதித்தனர்

சல்மான் கான் தங்கை பிறந்தநாளில் கூச்சல், கும்மாளம்: போலீசார் தடுத்து நிறுத்தி ரூ.12,500 அபராதம் விதித்தனர்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தங்கை பிறந்த நாள் விழாவில் அதிக சத்தத்துடன் நடந்த இன்னிசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார், அபராதமும் விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதாவின் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி மும்பை பாந்திராவில் உள்ள ’பசிபிக் ஹைட்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், அவரது தம்பி சலீம்கான், தாயார் ஹேலன், அண்ணன் அர்பாஜ், தம்பி சோகைல்கான், அண்ணி மலாய்க்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்தி திரைப்பட நட்சத்திங்களான சோனாக்ஷி சின்ஹா, ஸ்ரத்தா கபூர், கரிஷ்மா கபூர், ரித்தேஷ் தேஷ்முக், மனைவி ஜெனிலியா, இம்ரான் கான், சோகா அலிகான், அவரது கணவர் குணால் கேமு, சாய்னா என்.சி, கரண் ஜோஹர், தினோ மாரியா, சங்கி பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பிறந்தநாள் விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி அதிக சத்தத்துடன் நடந்து வந்ததால் அக்கம் பக்கத்தில் வசிப்போர் எரிச்சல் அடைந்தனர். இதனால், அந்த அடுக்கு மாடியில் குடியிருப்போர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் புகார் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று அதிகாலை 3.45 மணிக்கு விரைந்து வந்தனர். அங்கு நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர் விழா ஏற்பாடு செய்தவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிறந்தநாள் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த சந்தோஷ் மானே என்பவருக்கு பன்னிரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.