வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர்கள் விஷால், கார்த்தி உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர்கள் விஷால், கார்த்தி உதவி

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கும் பணியில் நடிகர், நடிகைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராஜபாளையத்தில் ‘மருது’ படப்பிடிப்பில் இருந்த விஷாலும் ஐதராபாத்தில் ‘தோழா’ படப்பிடிப்பில் இருந்த கார்த்தியும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பி ‘ரெஸ்க்யூ சென்னை குரூப்’ என்ற பெயரில் புதிய ‘வாட்ஸ்-அப்’ குரூப்பை உருவாக்கினர்.

இந்த குரூப்பில் நடிகர்கள் நாசர், எஸ்.வி.சேகர், ராஜேஷ், விக்ரம் பிரபு, அதர்வா, அருள் நிதி, பொன்வண்ணன், மனோபாலா, உதயநிதி, கருணாஸ், சாந்தனு, ஜூனியர் பாலையா, ரமணா, நந்தா, உதயா, ஸ்ரீமன், பூச்சிமுருகன், பாடகர் கிரிஷ், நடிகைகள் குஷ்பு, ரோகிணி, குட்டிபத்மினி, லலிதாகுமாரி, சோனா, கோவைசரளா, சங்கீதா உள்பட பலர் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் உணவு, துணிமணிகள், பால் பவுடர்கள் போர்வைகள் போன்றவை சேகரிக்கப்பட்டன.

திருப்பூரில் இருந்தும் பல நிறுவனங்கள் மூலமாக துணிமணிகளை வரவழைத்தார்கள். சென்னையில் காலை சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவு உணவுகளையும் தயார் செய்தார்கள். இவைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. விஷால் வடசென்னை பகுதியில் முகாமிட்டு இவற்றை நேரில் வழங்கி வருகிறார். கார்த்தி, கே.கே.நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, பகுதிகளில் வினியோகித்து வருகிறார். கல்லூரி மாணவர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினரும் இவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.