தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் அரவிந்த்சாமி

தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் அரவிந்த்சாமி
ஜெயம் ரவி – நயன்தாரா நடித்த ‘தனி ஒருவன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வசூலிலும் சாதனை படைத்திருக்கிறது. இதையடுத்து இந்த படம் தெலுங்கில் ‘ரீமேக்’ ஆகிறது.

இந்த படத்தில் ஜெயம் ரவி வேடத்தில் ராம்சரண் நடிக்கிறார். இதில் வில்லனாக மாதவன் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதை மாதவன் மறுத்து விட்டார்.

‘தனி ஒருவன்’ பட வெற்றிக்கு அதில் அமைதியான வில்லனாக வந்து நடிப்பில் அட்டகாசப்படுத்திய அரவிந்த்சாமியும் காரணம் என்று பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

எனவே, தெலுங்கு ரீமேக் படத்திலும் அரவிந்த்சாமியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி நடந்து வந்தது.

முதலில் அவர் தயக்கம் காட்டினார். என்றாலும் தெலுங்கில் தனி ஒருவன் படத்தை தயாரிக்கும் படக்குழுவினர் அரவிந்த்சாமியிடம் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். இதையடுத்து ராம்சரண் நடிக்கும் இந்த படத்திலும் அரவிந்த்சாமி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சுரேந்தர் ரெட்டி, அல்லுஅரவிந்த் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். அரவிந்த்சாமியின் ஒப்புதல் கிடைத்து விட்டதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.